பிரதமருக்கும் இந்திய துணை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (19) கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து துணை ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தினர். 

பிரதமர் அலரி மாளிகையில் வழங்கிய மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நாகரிக மரபுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

முன்னதாக, இந்தியத் துணை ஜனாதிபதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார். 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. 

பொதுவான வரலாறு மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையில் அமைந்த பன்முக இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது 'X' பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இங்கு இந்தியாவின் அயலவருக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை மீதான அர்ப்பணிப்பை இந்தியத் துணை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 

இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

இன்று காலை 9:30 மணியளவில் 49 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி, நாளை (20) வரை நாட்டில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post