தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது சர்வேயர் தேஜஸ்வர், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை 2025 மே 18 அன்று திருமணம் செய்தார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் பிப்ரவரி 13 அன்று நடந்தது. ஆனால், திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் கேஷியராக பணிபுரியும் ஒருவருடன் காதல் தொடர்பு இருப்பதாகக் கருதி, திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
பின்னர், ஐஸ்வர்யா வீடு திரும்பி, “யாரையும் காதலிக்கவில்லை, தேஜஸ்வரையே உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்” என உணர்ச்சிவசப்பட்டு பேசியதால், தேஜஸ்வர் நம்பி, குடும்பத்தினரை சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்தினார்.
திருமணத்திற்கு பிறகு, ஐஸ்வர்யாவின் நடத்தையில் தேஜஸ்வருக்கு சந்தேகம் எழுந்தது. அவர் தனது கள்ளக்காதலனுடன் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசியது தம்பதியர் இடையே தகராறை ஏற்படுத்தியது. இதனால், தேஜஸ்வரின் குடும்பத்தினருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மோதல் ஏற்பட்டது.
ஜூன் 17 அன்று, தேஜஸ்வர் வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், ஐஸ்வர்யா மீது புகார் அளித்தனர். காவல்துறை விசாரணையில், ஐஸ்வர்யாவும் அவரது தாயார் சுஜாதாவும் கூலிப்படையை ஏவி தேஜஸ்வரை கொலை செய்தது தெரியவந்தது.
ஐஸ்வர்யா, தனது தாயார் சுஜாதா பணிபுரியும் வங்கியில் கேஷியராக உள்ள நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவுக்கு தேஜஸ்வர் இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
ஜூன் 17 அன்று, நில அளவைக்காக அழைக்கப்பட்ட தேஜஸ்வர், காரில் கடத்தப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு, ஆந்திராவின் பன்யம் அருகே சுகாரி மெட்டு பகுதியில் உடல் வீசப்பட்டது.
காவல்துறை, ஐஸ்வர்யாவின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து, அவர் திருமணத்திற்கு பிறகு கள்ளக்காதலனுடன் 2,000 முறை பேசியதைக் கண்டறிந்தது.
ஐஸ்வர்யாவும் சுஜாதாவும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள வங்கி கேஷியர் மற்றும் கூலிப்படையினரை கைது செய்ய காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இந்த கொலை, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.