கனடாவில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிகளை அனுசரணை செய்து நிரந்தரமாக தம்முடன் அழைத்து வருவதற்கான 'Parents and Grandparents Program' (PGP) திட்டத்தில் புதிய விண்ணப்பங்களை ஏற்பதை கனடா அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தகவலை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. குடியேற்ற அமைப்பைச் சீரமைக்கவும், சமநிலையான நடைமுறைகளை உருவாக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய விண்ணப்பங்களுக்குத் தடை: இனி வரும் காலங்களில் இந்த திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. பழைய விண்ணப்பங்கள்: ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களின் செயல்முறைகள் வழக்கம் போலத் தொடரும். மறுபரிசீலனை: குடியேற்ற அமைப்பில் நீடித்த நிலைத்தன்மையை உருவாக்கவும், திட்டத்தை மறுசீரமைக்கவும் இந்த இடைவெளி தேவைப்படுவதாக கனேடிய அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஒன்றிணைக்க உதவிய இந்த PGP திட்டம், சமீபகாலமாக விண்ணப்பங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயர்ந்ததால் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் விண்ணப்பங்களைச் செயல்படுத்தும் கால அவகாசம் அதிகரித்ததுடன் நிர்வாகச் சிக்கல்களும் உருவாகின. இதேவேளை, கனேடிய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறித்து, கருத்துரைத்துள்ள குடியேற்ற ஆலோசகர்கள், "இந்த முடிவு தங்கள் அன்புக்குரியவர்களை அழைத்து வரக் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு பெரும் மனஅழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும்," என கவலை தெரிவித்துள்ளனர்.
