நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குளியாபிட்டியவை சேர்ந்த 50 வயதான ஏ.எம். ரங்க நிஷாந்த ராஜபக்சவின் உடல், நேற்று (30) பிற்பகல் அவரது வெற்றிலை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் கால்களில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது அவரது உடல் கிடந்த இடத்திற்கு அருகில் இரத்தக்கறை படிந்த கத்தி ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
திறைசேரியிலிருந்து ஹேக்கர்களால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக திணைக்களத்தைச் சேர்ந்த இவர் உட்பட மேலும் மூன்று அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த அதிகாரி தனது பதவிக்காலத்திலும், இடை நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் தனது வெற்றிலை தோட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதாகவும், பணிக்கு ஆட்களை அமர்த்தியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த தோட்டத்தில் பணிபுரிந்த சிலர் குறித்த அதிகாரி கால்களில் இரத்தக்காயங்களுடன் கிடப்பதைக் கண்ட பின்னர், குடியிருப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தள்ளனர்.
இதன்பின்னர், தோட்டத்திற்கு வருகை தந்த உயிரிழந்த நபரின் மகள் மற்றும் உறவினர்களால் இது தொடர்பாக குளியாபிட்டிய தலைமையக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய தலைமையக பொலிஸார், குளியாபிட்டிய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு (SOCIO) பொறுப்பதிகாரி எம்.எல். விஜயதுங்க, அப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் குழுவினருடன் அங்கு சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.இதனையடுத்து குளியாபிட்டி போதனா மருத்துவமனை தடயவியல் மருத்துவ அதிகாரி பாலசூரியாவும் அங்கு சென்று ரங்கவின் உடலை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், பிரேதப்பரிசோதனை இன்று (1) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவர் விசாரணைகளில் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் சில தகவல்கள் பொய்யானவை என்றும், அவர் ஏப்ரல் மாதத்தில் பலமுறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் பரிமாற்றம் மற்றும் தரவு நீக்கம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத்திணைக்களம் தற்போது நீக்கப்பட்ட தரவுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக தடயவியல் பகுப்பாய்விற்காக அவரது வீட்டிலிருந்து நான்கு கைபேசிகளையும் கைப்பற்றியுள்ளது.
இந்த அதிகாரியின் மரணம், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு ஒரு பெரும் பின்னடைவு என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி முறைகேட்டிற்கு வழிவகுத்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் பற்றி அறிந்திருந்த முக்கிய நபர் அவர் என்றும் கூறப்படுகின்றது.
பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான உயர் மட்டத்தகவல்களை மூடிமறைப்பதற்காக இந்த மரணம் நிகழ்த்தப்பட்டதா என்பது குறித்து தற்போது சமூக மட்டத்தில் வலுவான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
