மற்றுமொரு எரிபொருள் கப்பல் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

 

யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"எம்.டி. யுரேகா" (MT Eureka) எனும் பெயருடைய இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சோமாலியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் யேமன் கடலோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

 

கானா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஏடன் வளைகுடா பகுதியில் வைத்து இக்கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டதாக அந்த செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

கடத்தப்பட்ட போது இக்கப்பல் டோகோ (Togo) நாட்டின் கொடியின் கீழ் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவை தளமாகக் கொண்ட கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், சுமார் 8 நாட்களுக்கு முன்பு புஜைராவிலிருந்து புறப்பட்டு யேமன் கடற்கரையில் உள்ள அல் முக்கல்லா துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

 

கடந்த 10 நாட்களுக்குள் கடத்தப்பட்ட இரண்டாவது எரிபொருள் கப்பல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

 

முன்னதாக, ஏப்ரல் 22ஆம் திகதி 18,500 பீப்பாய் எரிபொருளை மொகடிஷுவுக்கு ஏற்றிச் சென்ற "ஹானர் 25" (Honor 25) எனும் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருந்தனர்.

 

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் நான்கு கடத்தல் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும், சோமாலியாவின் பரந்த கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு கடற்கொள்ளைச் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருவதாகவும் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

2011ஆம் ஆண்டு முதல் குறைவடைந்து வந்த சோமாலிய கடற்கொள்ளைச் சம்பவங்கள், 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து மீண்டும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.